بسم الله الرحمن الرحيم
”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு
நோன்பாளிகளே! சகோதர, சகோதரரிகளே! இங்கு புறம் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பதைப்பற்றி எத்திவைக்கப்படுகிறது காரணம் நாம் இன்று புனிதமான ரமலானில் இருக்கிறோம் இந்த மாத்தில் தான் நாம் இந்த புறம் பேசும் பழக்கத்தை கைவிடு வதற்கான சரியான பயிற்சி எடுக்க முடியும்!
ஏனையோருக்கு புறம் பேசுவது பற்றிய கட்டுரை படிப்பது கசப்பாக இருக்கும் இருந்தாலும் ”நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது (திருமறை 94-6)” – திருமறை வசனத்தை படிக்கும்போது நிச்சயம் தங்களுக்கு இந்த கட்டுரை இன்பம் தரும் என்பதை நம்புகிறேன்.புரிந்துக்கொள்ளும் ஆற்றலை நம் அனைவருக்கும் அல்லாஹ் அள்ளித்தருவானாக!
ரமலானில் பாவங்கள் நம்மை விட்டு நீங்க நோன்புள்ளவரும் நோன்பு இல்லாதவரும் முறையாக பயிற்சி எடுக்கவேண்டும் அப்படிப்பட்ட பாவமான காரியங்களின் பட்டியலில் முன்னனியில் இருக்கும் பாவம் ”புறம் பேசுதல்” எனவே இங்கு புறம் பேசுதல் பற்றி கட்டுரை வரையப்பட்டுள்ளது.
இந்த உலக வாழ்க்கை அற்பத்திலும் அற்பமான வாழ்க்கைதான் இப்படிப்பட்ட நிலையிலும் சில சகோதரர்கள் நம்மை சூழ்ந்துக்கொண்டு தேவையற்ற வார்த்தைகளை விடுவார்கள் மேலும்
-
இவன் இப்படித்தான்! அவன் அப்படித்தான்!
-
நீ இப்படிப்பட்டவன்! நீ அப்படிப்பட்டவன்!
-
இவன் சிறுபிள்ளைத்தனமாக நடந்துக்கொள்கிறான்!
-
நீ அந்த ஜமாஅத்காரன்!
-
அவனுக்கு புத்தி மாறிபோச்சு!
-
இவன் பொய்யன்!
-
அவன் கிருக்கன்!
-
உனக்கு அறிவு பத்தவில்லை! என்றெல்லாம் பேசுவார்கள்.
ஏகத்துவத்தை எத்திவைக்கும் போதும் இப்படிப்பட்ட புறம் பேசுபவர்களின் வார்த்தைக் கொடுமைக்கு மாட்டிக்கொண்டு நம் தாவா சகோதரர்கள் சற்று உணர்ச்சிவசப்பட்டு தகராறுகளில் நுழைந்து மாட்டிக்கொள்கிறார்கள் புறம்பேசுபவர்களை எவ்வளவுதான் திருத்தினாலும் இவர்கள் திருந்தியபாடில்லை தங்கள் நாவுகளால் மீண்டும் மீண்டும் சிலர் சிலரை ஏசுவது வாடிக்கையாக உள்ளது இப்படியே இவர்களை விட்டுவிட்டால் இவர்கள் சீரழிந்துவிடுவார்கள் இவர்கள் சீரழியக்கூடாது புறம் பேசுவதால் எற்படக்கூடிய தீமையை இவர்கள் அறிந்துக்கொள்ள வேண்டும்.
புறம் பேசுபவர்கள் என்ன தான் வார்த்தை கொடுமைகளால் சீண்டினாலும் ஒரு உண்மையான மூமின்கள் அந்த புறம் பேசுபவர்களுக்கு உதவ கடமைப்பட்டுள்ளோம் காரணம் கீழ்கண்ட நபிமொழிதான் கேளுங்கள்! சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (திருமறை)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”நீ உன் சகோதரனுக்கு உதவிடு, அவன் கொடுமைக்காரனாக இருப்பினும் சரி, கொடுமை இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் சரி!” ஒருவர் வினவினார்: ”அல்லாஹ்வின் தூதரே! கொடுமைக்கு ஆளானவன் என்றால் நான் அவனுக்கு உதவுவேன். ஆனால், கொடுமைக்காரனாக இருக்கும்போது அவனுக்கு எவ்வாறு உதவுவேன்?” நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்: ”கொடுமை புரிவதிலிருந்து அவனை நீ தடுத்துவிடு! இதுவே அவனுக்கு உதவுவதாகும்.” அறிவிப்பாளர் : அனஸ் (ரழி) (புகாரி, முஸ்லிம்)
நாவை கட்டுப்படுத்த நபிகளாரின் அறிவுரைகளை
‘நோன்பு ஒரு கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் நாளில் தம் நாவால் தீய வார்த்தைகளை பேச வேண்டாம். சச்சரவில் ஈடுபட வேண்டாம், கூச்சலிட வேண்டாம், அவரிடம் எவராயினும் வசை மொழி பேசினால் அல்லது சண்டையிட முனைந்தால் தாம் ஒரு நோன்பாளி என்பதை சொல்லிவிடட்டும்!’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).
சரி அல்லாஹ் புறம் பேசித்திரிபவர் பற்றி என்ன சொல் கிறான்
“குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான். ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும். அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும். நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும். நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப் பட்டவர்களாக)” (அல்-குர்ஆன் 104:1-9)
சகோதரர்களே இங்கு ஹுதமா என்ற நரக நெருப்பைப்பற்றி அல்லாஹ் எச்சரிக்கிறான் ஆனால் நாமே அதைப்பற்றி கண்டுக்கொள்ளாமல் கோள், புறம், கிண்டல், நையாண்டி போன்றவற்றை செய்துக்கொண்டு சிலர் சிலரை உசுப் பேற்றிக் கொண்டிருக்கிறோம்!
நாம் ஹுதமா என்ற நரக நெருப்பிற்கு அஞ்சிக்கொள்ள வேண்டாமா?
ஹுதமா-வுடன் நரகத்திற்கு எத்தனை வாசல்கள் உள்ளன?
1. ஜஹன்னம்
2. ஹுதமா
3. லழா
4. ஸஈர்
5. ஸகர்
6. ஹாவியா
7. ஜஹீம்.
“அதற்கு (நரகத்திற்கு) ஏழு வாசல்கள் உண்டு. அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்டு (தனித்தனி) பிரிவினருக்கு உரியதாகும்” (அல்குர்ஆன்: 15:44)
இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? -அல்லாஹ்வின் வார்த்தையைக் கேளுங்கள் –
மூமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்தும் விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும். (பிறர் குறைகளைத்) துருவித் துருவி ஆராய்ந்துக் கொண்டிராதீர்கள். அன்றியும் உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன். மிக்க கிருபை செய்பவன். (அல்குர்ஆன் 49:12)
ஏகத்துவ (ஓரிரைக்) கொள்கையாளிக்கு இழைக்கப்படும் தீங்கு பற்றி நபிகளார்
கப்பாப் இப்னு அல்அரத் (ரழி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்த்துக் கொண்டிருந்தபோது அவர்களிடம், (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும்
கொடுமைகளை) நாங்கள் முறையிட்டபடி ‘எங்களுக்காக இறைவனிடம் நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காகப் பிரார்த்திக்கமாட்டீர்களா?’ என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உங்களுக்கு முன்னிருந்த வர்களிடையே (ஓரிறைக் கொள்கையை ஏற்று இறைத்தூதரை நம்பிய) ஒருவர் பிடிக்கப்பட்டு, அவருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்படுவார். பின்னர் ரம்பம் கொண்டுவரப்பட்டு அவரின் தலையில் வைக்கப்பட்டு, அது இரண்டு பாதியாகப் பிளக்கப்படும. (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச்
சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் தசையையும் எலும்பையும் கடந்து சென்றுவிடும். ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து, அவரை (அவர் ஏற்றுக் கொண்ட) அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படுவது உறுதி. எந்த அளவிற்கென்றால் வானத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனிலுள்ள) ‘ஸன்ஆவிலிருந்து ‘ஹள்ரமவ்த்’ வரை பயணம் செல்வார். (வழியில்) அல்லாஹ்வையும் தவிர வேறெதற்கும் (வேறெவருக்கும்) அவர் அஞ்சமாட்டார். ஆயினும், (தோழர்களே!), நீங்கள் தாம் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகின்றீர்கள்’ என்றார்கள். நூல்; புகாரி- எண் 6943
இறைவிசுவாசிகளை பகைத்துக்கொள்பவர்கள் பற்றி நபிகளார் கருத்து!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரை பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன். நான் என் அடியான் மீது கடமையாக்கியிருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும். எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன். நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன். அவன் என்னிடம் கேட்டால், நான் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன். முஃமினுடைய உயிரைக் கைப்பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம் அடைவதில்லை. (ஏனெனில்) என் அடியான் மரணத்தை வெறுக்கின்றான். நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன்.” (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி), நூல் :புகாரி)
அல்லாஹ்வின் பார்வையில் உண்மை மற்றும் பொய்
”உண்மையை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நிச்சயமாக உண்மையோ, நன்மையின் பால் கொண்டு செல்லும், நன்மையோ சொர்க்கத்திற்கு கொண்டு போகும் ஒருவர் உண்மையையே பேசிக் கொண்டே உண்மையை (வெளியாக்குவதற்கு) முயற்சி செய்து கொண்டு இருந்தால் (அவரைப்பற்றி) அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படும். (அதே போன்று) பொய்யையும் விட்டுவிடுமாறு உங்களை எச்சரிக்கிறேன். ஏனென்றால் நிச்சயமாக பொய் பாவங்களின் பக்கம் சேர்ந்து விடும். நிச்சயமாக பாவங்களோ மனிதனை நரகத்தில் சேர்த்து விடும். ஒரு மனிதன் பொய்யுரைத்துக் கொண்டே பொய்யை (வெளியீடுவதற்கு முயற்சித்தால்) அவரை பற்றி அல்லாஹ்விடம் பொய்யன் என்று எழுதபடும் என்று நபி (ஸல்) கூறினார்கள். ” அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வுத் (ரழி), நூல்:புகாரி, முஸ்லிம்
முஸ்லிம்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்
“ஒவ்வொரு முஸ்லிமும் பிற முஸ்லிமின் மீது அவருடைய இரத்தம், கண்ணியம், பொருள் இவற்றை களங்கப்படுத்துவது ஹராமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
மற்றவர்களின் குறைகளைத் தேடி திரிகின்றவர்கள் பற்றி நபிகளார் (ஸல்) என்ன சொன்னார்கள்
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது உரையின் போது, “உள்ளத்தில் இல்லாது உதட்டால் நம்பிக்கை கொண்டவர்களே! முஸ்லிம்களைப் பற்றியும் புறம் பேசாதீர்கள்; அவர்களது குறைகளை ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; யார் மற்றவர்களின் குறைகளைத் தேடி திரிகின்றாரோ, அவர்களது குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிக்கின்றானோ அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி அவர்களை இழிவுபடுத்தி விடுவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: அஹ்மத்)
சரி இந்த புறம் பேசுபவர்கள் இவற்றை அறிந்துக்கொண்டும் திருந்தாமல் மேலும் மேலும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தால் நாம் என்ன செய்வது! அல்லாஹ்வின்
வார்த்தையைத் தான் கேட்கவேண்டும் அவனே நமக்கு நீதிபதி!
‘இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள், மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால், ‘ஸலாம்’ (சாந்தி யுண்டாகட்டும் என்று), சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.’ (25: 63)
அல்ஹம்துலில்லாஹ்
மறுமொழியொன்றை இடுங்கள்