முஹர்ரம் பண்டிகையும் இணைவைப்பாளர்கள் கடைபிடிக்கும் அநாச்சாரங்களும்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
முஹர்ரம் மாதம் வந்துவிட்டாலே ஏதோ வானமே இடிந்து தங்கள் தலைகளின் மீது விழுந்துவிட்டது போன்றும் வானில் உள்ள நட்சத்திரங்கள் எல்லாம் உதிர்ந்துவிட்டது போன்றும் ஒருவகையான சோகம்தான் பெரும்பாலும் இணைவைப்பு முஸ்லிம்கள் மத்தியில் வந்துவிடுகிறது. ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று காரணம் கேட்டால் முஹர்ரம் மாதம் மாபெரும் துக்ககரமான மாதம் என்றும் இந்த மாதத்தில்தான் நபிகளார் (ஸல்) அவர்களின் அருமைப் பேரப்பிள்ளைகளான ஹசேன் மற்றும் ஹுசைன் (ரலி) ஆகியோர் கர்பலா போர்க்கல மைதானத்தில் வீரத்தியாகம் செய்தார்கள் என்றும் அதற்காகத்தான் தாங்கள் துக்கம் அணுசரிப்பதாகவும் கூறுகிறார்கள். இவர்களுடைய மூடநம்பிக்கை மற்றும் அநாச்சாரங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. இது முழுக்க முழுக்க மார்க்க விரோதமான செயல்கள் மட்டுமல்லாது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையே தகர்த்தெரியும் காரியங்களில் ஒன்றுமாகும். ஹசேன் மற்றும் ஹுசைன் (ரலி) ஷஹீதானார்கள் என்று ஒருநாளை ஒதுக்கி அந்த நாளை மாபெரும் துக்க-நாளாக அனுசரித்து, நெஞ்சில் அடித்துக்கொண்டு ஒப்பாரிவிட்டு அழக் கூடிய தவறான கொள்கைவாதிகள் தங்களது கொள்கையின் மூலம் இஸ்லாத்தின் அடிப்படையே உடைக்கிறார்கள் என்பதற்கான அடுக்கடுக்கான சான்றுகள் உள்ளன இதோ உங்கள் பார்வைக்கு சில:
கீழ்கண்டவையெல்லாம் தியாகம் இல்லையா?
-
இப்ராஹீம் (அலை) தம் அன்பு மனைவி ஹாஜர் (அலை) அவர்களை அல்லாஹ்வின் கட்டளைப்படி பாலைவனத்தில் பச்சிளங் குழந்தையுடன் தவிக்கவிட்டு சென்றார்களே இது தியாகமில்லையா?
-
அல்லாஹ்வின் கட்டளைப்படி தம் அருமை மகனை அறுத்துப்பலியிட இப்ராஹீம் (அலை) முனைந்தார்களே இது தியாகமில்லையா?
-
தந்தை இப்ராஹீம் (அலை) தம்மை அறுத்துப் பலியிட துணிந்ததும் அல்லாஹ்வுக்காக இஸ்மாயீல் (அலை) தன்னை அறுக்கப்படவும் ஒத்துக்கொண்டார்களே இது தியாகமில்லையா?
-
தனது எஜமானனால் அனல் பறக்கும் பாலைவன மணலில் கட்டிப்போடப்பட்டும் அடிமை பிலால் (ரலி) ஏகன் ஏகன் என்று உறைத்தார்களே இது தியாகம் இல்லையா?
-
நபிகளார் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றதற்காக 70க்கும் மேற்பட்ட சஹாபிய குடும்பங்கள் தங்கள் சொந்தபந்தங்களை விட்டும், சொத்து சுகங்களை உதறித்தள்ளியும் ஹிஜரத் செய்தார்களே இது தியாகம் இல்லையா?
-
நபிகளார் (ஸல்) உயிரோடு இருந்த காலத்தில் நடைபெற்ற போர்க்களங்களில் சஹாபி ஷஹீதாக்கப்பட்டு கஃபன் துணி கூட போதாத நிலையில் அடக்கம் செய்யப்பட்டார்களே இது தியாகம் இல்லையா?
-
மார்க்கத்தை பின்பற்றியதற்காக ஒரு சஹாபிய பெண்மணியின் மர்மஸ்தானத்தில் கயவர்கள் ஈட்டியை பாய்ச்சி கொன்றார்களே இது தியாகம் இல்லையா?
-
எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு யுத்தத்தில் நபிகளாருக்கு வெட்டுக்காயம்பட்டு அவர் மரணம் அடைந்தவிட்டார் என்று வதந்தி பரப்பப்பட்டதே! இது தியாகம் இல்லையா?
துக்கம் அணுசரிப்பதாக இருந்தால் ஒரு நாள் போதுமா?
அவர்கள், எங்கிருப்பினும் அவர்கள் மீது இழிவு விதிக்கப் பட்டுள்ளது. அல்லாஹ்விடமிருந்தும், மனிதர்களிடமிருந்தும் அவர்களுக்கு(ப்பாதுகாவலான) ஒப்பந்தமின்றி (அவர்கள் தப்ப முடியாது). அல்லாஹ்வின் கோபத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள்;. ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது. இது ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் ஆயத்களை நிராகரித்தார்கள்;. அநியாயமாக நபிமார்களை கொலை செய்தார்கள்;. இன்னும் அவர்கள் பாவம் செய்து கொண்டும் (இறையாணையை) மீறி நடந்து கொண்டும் இருந்தது தான் (காரணமாகும்) (அல்குர்ஆன்)
நபிகளாரின் பேரப்பிள்ளைகள் ஷஹீதாக்கப்பட்டதன் நினைவாக 1-நாளை துக்க நாளாக அணுசரிக்கிறார்கள் ஆனால் துக்கம் அணுசரிப்பதாக இருந்தால் நமக்கு 1 நாள் போதுமா? இல்லையே மாறாக நாம் வருடத்தின் 365 நாட்களும் துக்கம் அணுசரிக்க வேண்டுமே! நம்முடைய புனிதமான இந்த மார்க்கத்தை எத்திவைத்ததற்காக அநியாயமாக இறைத்தூதர்களான நபிமார்கள் கொல்லப் பட்டுள்ளார்களே! ஹசேன் ஹுசைனுக்கு (ரலி) ஆகியோருக் காக மட்டும் 1 நாள் துக்கநாள் என்றால் உலகம் படைக்கபட்பட்டது நாள் முதற்கொண்டு கொல்லப்பட்ட நபிமார்களுக்கும், சத்திய சஹாபாக்களுக்கும் என்று கணக்கு போட்டால் மொத்தமாக வருடத்தில் 365 நாட்களும் துக்கம் அணுசரிக்க வேண்டுமே! ஏன் இவர்கள் இதற்கு முன்வரு வதில்லை!
சகோதரர்களே சிந்தித்துப்பாருங்கள்! இவர்கள் ஹசேன் மற்றும் ஹுசைன் (ரலி)-யை மட்டும்தான் வீரத்தியாகிகள் என்று எடுத்துக்கொள்கிறார்கள் மாறாக உடமைகள் மற்றும் உயிர்த்தியாகம் செய்த எத்தனையோ நபிமார்கள், சத்திய சஹாபாக்கள் போன்றோருக்கு அல்லாஹ் சாட்சியாக இருக்கிறான் ஆனால் இந்த முட்டாள்வாதிகளோ ஹசேன் மற்றும் ஹுசைன் (ரலி)-யை தவிர யாருமே தியாகமே செய்யாதது போன்று காட்டிக்கொண்டு கபட நாடகம் ஆடுகிறார்கள்?
எனவே சகோதரர்களே இவர்கள் துக்கம் அணுசரிப்பதன் மூலம் இவர்கள் திருக்குர்ஆனை புரட்டுவதில்லை என்ற உண்மையும் பொன்னான நம் மார்க்கத்ததை இழிவுபடுத்துகிறார்கள் என்ற உண்மையும் அம்பல மாகிறதல்லவா!
இஸ்லாத்தில் நல்லநாள் கெட்ட நாள் உள்ளதா?
காலத்தைக் குறை கூறாதீர்கள்; காலம் நானாக இருக்கிறேன்”. என்று அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
1400 ஆண்டு காலமாக ஒருநாளை துக்க தினமாக அணுசரித்து 1400 முறைக்கு மேல் அதுவும் வருடாவருடம் அல்லாஹ்வை குறை கூறுகிறார்களே இந்த செயல் ஒரு முஸ்லிமுக்கு தகுமா? அல்லாஹ்வை விட ஹசேன் ஹுசைன் சிறந்தவர்களா?
முஹர்ரம் மாத அநாச்சாரங்கள் பற்றி பார்ப்போமா!
10 நாள் மாமிசம் சாப்பிடாமல் இருப்பது!
ஹசேன், ஹுசைன் (ரலி) ஷஹீதான நாளை துக்கமான நாளாக கருதி முஹர்ரம் மாதத்தில் முதல் 10 நாட்கள் மாமிசம் சாப்பிடமாட்டோம் என்பதை கடைபிடிக்கிறார்களே அல்லாஹ் எந்த நாளிலாவது மாமிசம் உண்ணாதீர்கள் என்று கூறியிருக்கிறானா?
“நாம் உங்களுக்கு அளித்துள்ள தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள்; (அதற்கு நன்றி செலுத்தாமல்) அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்; (அப்படி செய்வீர்களானால்) உங்கள் மீது என் கோபம் இறங்கி விடும்; மேலும், எவன் மீது என் கோபம் இறங்குகிறதோ, அவன் நிச்சயமாக வீழ்வான். (அல்குர்ஆன் 20:81)
பஞ்சா எடுப்பது (பஞ்சதெய்வ கொள்கை)
நீங்கள் பஞ்ச சீல கொள்கையை கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் பஞ்ச தெய்வ கொள்கையை கேள்விப்பட்டதுண்டா? இதோ அந்த பஞ்ச தெய்வக் கொள்கையை சற்று அறிந்துக்கொள்ளுங்கள்!
பஞ்சா என்பதற்கு பாரசீக மொழியில் ஐந்து என்று பொருள்.
1) நபி (ஸல்)
2) அலி (ரலி)
3) பாத்திமா(ரலி)
4) ஹஸன்(ரலி)
5) ஹூஸைன்(ரலி)
மேலே கூறப்பட்ட ஐந்து பேருக்கும் தெய்வீகத் தன்மை இருப்பதாக நம்புவது ஷியாக்களின் கொள்கையாகும் இதுதான் பஞ்சா என்பதற்கான உண்மை கருத்தாகும். பஞ்சா என்ற பஞ்சதெய்வ கொள்கையின் மூலம் இஸ்லாத்தின் முதல் கலிமாவாகிய ஓரிறைக் கொள்கையை வேறுக்கும் செயல்களில் ஈடுபடுவது கூடுமா? பஞ்சா விழா நடத்துபவரும் அந்த விழாவை ஆதரிப்பவர்களும் நரகத்திற்குத்தானே தங்களை ஆயத்தப் படுத்துகிறார்கள்!
மதுரமான ஷர்பத் தண்ணீர் மற்றும் பாத்திஹா சடங்கு
வீட்டில் உள்ள பாட்டிமார்கள் ஒரு பித்தளை தேக்சாவை எடுப்பார்கள் சுத்தமான நீரால் கழுவி நல்ல துணியால் உள்பக்கம் துடைத்துவிடுவார்கள் உடனே ஃபாத்திஹா ஓதி அந்த பித்தளை தேக்சாவிற்குள் சாம்பிராணி புகை போடுவார்கள் பிறகு அந்த தெய்வீக தேக்சாவை அப்படியே அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி வெல்லம் போட்டு பலவகையான பழங்களையும் கசகசவையும் விட்டு சுடச்சுட மதுரமான ஷர்பத் செய்வர்கள் சூடு ஆறும் முன் குடிப்பார்கள் இதற்கு முஹர்ரம் ஷர்பத் என்று பெயர். மற்றும் சிலர் பசும்பால் ஊற்றி அதில் சில வாசனை திரவியம் இட்டு ஆனந்தமாக குடித்து ரசிப்பார்கள் இந்த கேடு கெட்ட செயலும் இந்த நாளில் அரங்கேற்றப்படுகிறது!
இந்த முஹர்ரம் மாதத்தில் மட்டும் ஏன் இரத்தின் நிறத்தில் உள்ள ஷர்பத் செய்கிறீர்கள் என்று பாட்டிமார்களிடம் கேட்டால் அது ஹசேன் ஹுசைன் (ரலி) அவர்கள் சிந்திய இரத்தத்திற்கான அடையாளமாகும் இது தெய்வீக பானமாகும் என்பார்கள். இந்த ஷர்பத் முஹர்ரம் மாதத்தை தவிர வேறு எந்த மாதத்திலும் செய்யமாட்டார்கள்.
இதை தெளிவாக சிந்தித்துப் பார்த்தால் மாற்று மத்ததவர்களின் செயல்களை ஒத்திருக்கும் அவர்கள்தான் தங்கள் பண்டிகை நாட்களில் ஒருவகை போதை பானம் (மதுவை) குடிப்பார்கள் ஆனால் போதை பானத்திற்கு மார்கத்தில் நேரடியாக தடை உள்ளதே எனவேதான் இவர்கள் இனிப்பு பானம் செய்து குடிக்கிறார்கள் போலிருக்கிறது.
மார்பில் அடித்துக்கொள்வது
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
மறுமை நாளையும் நம்பியுள்ள பெண், தன்னுடைய கணவனைத் தவிர வேறு யாருடைய மரணத்திற்கும் மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாது; கணவன் இறந்தால் மட்டும் நான்கு மாதங்களும் பத்து நாள்களும் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும்.” உம்மு ஹபீபா(ரலி) அறிவித்தார். (புகாரி பாகம் 2, அத்தியாயம் 23, எண் 1281)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
(துக்கத்தில்) கன்னங்களில்) அறைந்து கொள்பவனும் சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் கால அழைப்பை விடுப்பவனும் நம்மைச் சேர்ந்தவனல்லன். என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
(புகாரி பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3519 )
இங்கு நபிகளார் கணவனை இழந்த பெண்ணைத் தவிர யாருக்கும் 3 நாட்களுக்கு மேல் துக்கம் அணுசரிக்கக்கூடாது என்று சூளுரைத்துவிட்டார்கள் ஆனால் நம்மவர்களோ 1400 ஆண்டுகளாக துக்கமும் மார்புகளில் அடித்துக்கொள்ளும் கேடுகெட்ட கொள்கையையும் பின்பற்றி கண்ணியமிக்க இறைத்தூதரை இழிவுபடுத்துகிறார்களே இது நம் மார்கத்திற்கு இழைக்கும் துரோகமில்லையா? இதன் மூலம் நபிகளாரின் அமுத மொழிகளை நயவஞ்சகமாக இந்த மனிதர்கள் புரக்கணிக்கிறார்கள் என்பது அம்பலமாக வில்லையா?
சிலம்பாட்டம், புலிவேஷம் போடுவது, குண்டம் மிதிப்பது
முஹர்ரம் வந்துவிட்டாலோ ஒருசாரார் சிலம்பை கையில் எடுத்துக்கொள்வார்கள் அதை மேலும் கீழுமாக சுற்றுவதும் அவற்றை கொண்டு தங்கள் வீரத்தை காட்டுவதும் வேடிக்கையாக இருக்கும் இப்படிப்பட்ட வீரர்கள் சமுதாயத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் பெண்கள் பின்னால் ஒழிந்துக்கொண்டு நிற்பார்கள் ஆனால் முஹர்ரம் மாதத்தில் மட்டும் வீரம் பொங்கி வழியும்.
மற்றொரு சாரார் உடலில் வர்ணசாயத்தால் புலி-வேஷம் போட்டுக்கொண்டு வீதி, வீதியாக சென்று பிச்சை எடுப்பார்கள் இவ்வாறு செய்வதால் தங்கள் நேர்த்திக்கடன் நிறைவேறுகிறது என்பார்கள் (சாராயம் குடித்துக்கொண்டு ஆடுவதும் உண்டு)
இன்னுமொரு சாரார் தங்கள் பகுதியில் நீளமான குழி தோண்டி அதற்குள் விறகுகட்டைகளை வைத்து எரித்துவிட்டு அதனால் உருவான நெருப்புக்கறியின் மீது வெறும் கால்களால் நடந்து தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுவார்கள். சிந்தித்துப்பாருங்கள் சிலம்பாட்டம், புலியாட்டம், குண்டம் மிதிப்பது நபிகளார் காட்டிய வழிமுறையா?
எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்;. அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்;. மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. (அல்குர்ஆன் 4:14)
முஹர்ரம் மாதம் மற்றும் திருமண சடங்குகள்
இந்த பொன்னான மாதத்தில் இணைவைப்பு மக்கள் யாரும் திருமணம் செய்துக்கொள்ளமாட்டார்கள் ஏன் என்று காரணம் கேட்டால் இந்த மாதத்தில் திருமணமாகும் மணப்பெண் வெகு விரைவில் விதவையாகிவிடுவாளாம்! (என்ன கேடுகெட்ட எண்ணம் இது!)
முஹர்ரம் மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்திருந்தல் தங்கள் புதுமணத் தம்பதிகளை இந்த மாதத்தில் பிரித்துவிடுவார்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டால் புதுமணப் பெண் தன் கணவனை இந்த மாதத்தில் கண்டால் அவன் இறந்துவிடுவானாம்! (என்ன கேடு கெட்ட எண்ணம் இது!)
சிந்தித்துப்பாருங்கள் இந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் தூக்கி வீசி விடுவார்களா? வியாபாரத்தில் இலாபம் கொட்டினால் முழுவதுமாக தர்மம் செய்துவிடுவார்களா?
முடிவுரை
எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்;. அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்;. மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. (அல்குர்ஆன் 4:14)
முஹர்ரம் மாத்தில் கடைபிடிக்கப்படுகின்ற மார்க்கம் அறிவுறுத்தாத செயல்கள் மற்றும் அநாச்சாரங்களை விட்டு விலகிடுங்கள் மரணம் எந்த வினடியும் நம்மை பதம் பார்த்துக்கொண்டிருக்கலாம் இன்றே விலகிடுங்கள் இந்த வினாடியே திருந்திவிடுங்கள் இது உங்கள் நலனுக்காகவே கூறப்படுகிறது இதற்கு மாற்றமாக புனிதமான முஹர்ரம் மாதத்தில் பேண வேண்டிய நல்ல அமல்களை செய்து சுவனத்திற்கான பாதைகளை எளிதாக்குங்கள்! அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!
அல்ஹம்துலில்லாஹ்
மறுமொழியொன்றை இடுங்கள்