பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனல்லாதவற்றை வணங்குவதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள் என்று (போதிக்குமாறு) நாம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதரை அனுப்பினோம்” (அல்குர்ஆன்: 16:36)
அல்லாஹ்வை ஏன் வணங்க வேண்டும்?
படைத்தவனும் படைக்கிறவனும் அல்லாஹ்,
படைத்ததை காக்கிறவனும் அல்லாஹ்,
படைத்தை அழிப்பவனும் அல்லாஹ்
அல்லாஹ் ஒன்றை ஒருவாக்க நாடினால் (குன்) ஆகுக என்று கூறினால் போதும் அது அவன் நாடியவிதத்தில் ஆகிவிடும். அல்லாஹ்வுக்கு அறிவுரை கூறத் தகுதியானவைகள் என்று எதுவுமே கிடையாது அவனே அறிவாகவும், ஞானமாகவும் இருக்கிறான்! அல்லாஹ்வுக்கு பலவீனம் கிடையாது, பிறப்பு கிடையாது, மரணம் கிடையாது, நித்திரை கிடையாது, மறதி கிடையாது இப்படிப்பட்டவன் தான் வணக்கத்திற்கு தகுதியானவன் இதைத்தான் அருள்மறை குர்ஆன் கீழ்கண்டவாறு கூறுகிறது
اللَّهُ لا إِلَهَ إِلا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لا تَأْخُذُهُ سِنَةٌ وَلا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأرْضَ وَلا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது, அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன். (அல்குர்ஆன்)
அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதை ஏன் தவிர்க்க வேண்டும்?
மலக்குமார்கள், நபிமார்கள், இறைநேசர்கள், அவ்லியாக்கள், மனிதர்கள், மற்றும் கல், மண், சிலை, மரம், சூரியன், சந்திரன் நட்சத்திரங்கள் ஏன் இப்லிஷ் மற்றும் ஜின் கூட்டங்கள் கூட தாமாக உருவாகவில்லை இவைகள் தாமாக உருவாகி இருந்திருந்தால் அல்லாஹ்வுக்கு இணையாக ஆகியிருக்கும் ஆனால் மாறாக அல்லாஹ்தான் இவைகளையும் படைத்தான்! இவைகள் ஒவ்வொன்றும் அல்லாஹ்வைத்தான் நாடியிருக் கின்றன ஆனால் அல்லாஹ்வோ யாரிடமும், எதனிடமும் தேவையுள்ளவனாக இல்லை மாறாக அவனே அனைத்துப் படைப்பினங்களுக்கும் தேவையுள்ளவனாக இருக்கிறான்.
உதவி என்ற இழிவு அல்லாஹ்வுக்கு கிடையாது எனவேதான் தமக்குத்தாமே உதவி செய்துக்கொள்ள முடியாத பலவீன மானவைகளை வணங்காதீர்கள் என்றும் எந்த பலவீனமும் இல்லாத அல்லாஹ்வை வணங்குங்கள் என்றும் அனைத்து நபிமார்களாலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிந்தித்துப்பாருங்கள் அவ்லியாக்கள் என்று யாரை வணங்கு கிறீர்களோ அவர்கள் மரணித்ததும் தாங்களாகவே கப்ருக்குள் சென்று அடங்கிவிட்டார்களா? இல்லையே மாறாக அவர்கள் மரணித்தவுடன் அவர்களுடைய ஜனாஸாவை மக்கள்தானே தோல்கொடுத்து தூக்கிச்சென்று அடக்கம் செய்தார்கள். நபிமார்கள் கூட மரணித்ததும் இவ்வாறுதானே நடந்தது அவ்வாறு இருக்க எந்த நபியானாலும், அவ்லியாவானாலும் பிறருடைய உதவியை நாடித்தானே வாழ்ந்துள்ளனர். இப்படிப்பட்ட பலவீனம் யாருக்கு இல்லையோ அவனே வணங்கத் தகுதியானவன் அவனே அல்லாஹ் அல்லாஹ்வின் கீழ்கண்ட அறிவுரையை செவிதாழ்த்திக் கேளுங்கள்!
“நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 46:4)
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் துதர்கள் ஏன் அனுப்பப் பட்டனர்?
மனித சமுதாயம் அனைத்தும் அரசர்கள், அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களைத்தான் தங்கள் தலைவர்களாக ஏற்றுக்கொண்டி ருக்கின்றனர் இப்படிப்பட்ட தலைவர்கள் மரணித்ததும் ஒரு கூட்டம் இந்த தலைவர்களின் நினைவாக சமாதி எழுப்பியும், சிலைகளை வடித்தும் இவர்களை ஞாபகப்படுத்தி வந்தனர், பிற்காலங்களில் இவர்களது வழித்தோன்றல்கள் இந்த நினைவுச் சின்னங்ளை வழிபாட்டுத்தளங்களாக மாற்றினர், இவர்களுக்கு பின் வந்த வழித்தோன்றல்கள் இந்த வழிபாட்டுத் தளங்களுக்கு காவியம் இயற்றி கூடவே இவ்வாறு பிரார்த்தித்தால் புண்ணியம் கிடைக்கும் என்று தவறான நம்பிக்கை கொண்டனர். ஷைத்தான் ஊட்டிய இந்த கெட்ட நம்பிக் கையின் மூலம் ஆதமின் சந்ததியினர் வழிதவறி நரகம் சென்றுவிடக்கூடாதே என்று அல்லாஹ் தன் புறத்திலிருந்து தூதர்களை அணுப்பினான் அவர்களின் மூலம் ஆதாரமற்ற ஊகங்களை தவிர்க்க அறிவுறுத்தினான். இதைத்தான் இந்த இறைவசனம் பின்வருமாறு கூறுகிறது.
அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனல்லாதவற்றை வணங்குவதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள் என்று (போதிக்குமாறு) நாம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதரை அனுப்பினோம்” (அல்குர்ஆன்: 16:36)
முதல் கலிமா
لا اله الا الله محمد رسول الله
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன் மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என்பது இந்த முதல் கலிமாவின் கருத்தாகும்.
சிந்தித்துப்பாருங்கள் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற் குரியவன் யாருமில்லை என்று தினமும் 5-வேளை பாங்கு சப்தத்திலும் ஓதப்படுகிறது அதை அழகாக கேட்டுக்கொண்டு தர்காவில் சென்று சமாதியான மைய்யித்திடம் உதவி தேடுகிறீர்களே இதன் மூலம் அல்லாஹ்வின் கட்டளை உங்களால் நிராகரிக்கப்படுகிறது! முதல் கொள்கையே நீங்கள் அறிந்தும் அறியாமல் நிராகரிக்கிறீர்கள் அதே சமயம் நீங்கள் இந்த உலகில் செய்யும் நல்ல அமல்களை அல்லாஹ் அழித்து விடுவதாக எச்சரிக்கிறான்!
”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)
அன்புச் சகோதரர்களே உங்கள் முதல் கலிமாவே கேள்விக் குறியாக இருக்கும் போது கஷ்டப்பட்டு மறுமைக்காக நீங்கள் சேமித்து வைக்கும் நன்மைகளான தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் மற்றும் திக்ருகள் என்னவாகும்? அவ்லியாக்களையும் நாதாக்களையும் வணங்கி மறுமையில் நீங்கள் நஷ்டவாளி யாகலாமா?
நாளை மறுமை நாளில் அவ்லியாக்கள் கைகொடுப்பார்களா?
அவ்லியாக்கள் மறுமையில் நமக்கு உதவுவார்கள் அல்லாஹ்விடம் மன்றாடி நமக்காக பரிந்துரை செய்து அவர்கள் நம்மை சுவனத்திற்கு இட்டுச்செல்வார்கள் நம் பாவங்களை அவர்கள் போக்குவார்கள் என்று நம்புகிறீர்களே இப்படிப்பட்ட மூட நம்பிக்கையை பற்றி அல்லாஹ் என்ன கூறுகிறான்? அல்லாஹ்வின் வார்த்தையான திருமறை குர்ஆனின் அறிவுரையை கேளுங்களேன்!
‘இன்னும் ‘மர்யமுடைய மகன் ஈஸாவே ‘அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும் போது அவர் ‘நீ மிகவும் தூய்மையானவன் எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை அவ்வாறு நான் கூறியிருந்தால் நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய் என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய் உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன் நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன் என்று அவர் கூறுவார்’ அல் குர்ஆன் (5:116)
(மேலும் ஈஸா (அலை) கூறுவார்} ‘நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி) ‘என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை மேலும் நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன் அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய் (என்றும்)’ (அல் குர்ஆன் 5:117)
சகோதரர்களே மரணித்த உயிரை அல்லாஹ்வுடைய உதவியுடன் உயிர்பித்த நபி ஈஸா (அலை) அவர்களுக்கே இந்த நிலை! மஹ்ஷரில் தம்மை வணங்கி அல்லாஹ்வுக்கு இணைவைத்த தம்முடைய சமுதாயத்தை கைவிட்டுவிடுவார் என்று அல்லாஹ் தெளிவாக இரண்டு வசனங்கள் மூலம் அறிவுரை கூறுகிறான் ஆனால் அதே சமயம் அற்பத்திலும் அற்பமான இறந்த ஒரு கொசுவையோ, ஈ-யையோ கூட உயிர்பிக்காத அவ்லியாக்கள் கைகொடுப்பார்கள் என்று நம்புகிறீர்களே இது முறையா?
நபிமார்களால் கூட தங்கள் குடும்பத்தாரை காப்பாற்றமுடிய வில்லை!
நூஹ், தம் இறைவனை அழைத்தார். ”என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்” என்றார். (அல் குர்ஆன் 11:45)
‘நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்” என்று அவன் கூறினான். (அல் குர்ஆன் 11:46)
ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (நரக) நெருப்பில்” என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்ற போது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, “என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில் தான் (இருக்கிறார்கள்)” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (347)
சிந்தித்துப்பாருங்கள்! நபிமார்களாலேயே தங்கள் குடும்பத்தினரை காப்பாற்ற முடியவில்லை நீங்கள் யார் என்றே அவ்லியாக் களுக்கு தெரியாத நிலையில் அவர்கள் உங்களை தேடிவந்து உதவுவார்கள், மறுமையில் கைகொடுப்பார்கள் என்று நம்பு கிறீர்களே இது நியாமாகபடுகிறதா?
அல்லாஹ்வும் அவனது தூதரும் என்ன கூறுகிறார்கள்?
அல்லாஹ் கூறுகிறான் : (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக’ (அல்-குர்ஆன் 2:186)
நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்: ‘நீ கேட்டால் அல்லாஹ்விடம் கேள்! உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு!’ (திர்மிதி)
உயர்ந்தவனாகிய உங்களின் இரட்சகன் வெட்கமுள்ளவன், சங்கையானவன் அவனிடம் இரு கைகளையும் உயர்த்தினால் (பிரார்த்தித்தால்) அவ்விரண்டையும் வெறுமையாக திருப்பி விட அவன் வெட்கப்படுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: சல்மான் (ரலி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அடியான் தனது இறைவனுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நேரம் அவன் ஸூஜூதில் இருக்கும் போது தான். எனவே (அந்த நிலையில்) அதிகம் துஆ செய்யுங்கள்’ அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.
நீங்கள் அல்லாஹ்விடம் உதவி கேட்டால் உங்களை வெறுங்கையோடு அனுப்ப அல்லாஹ் வெட்கப்படுகிறானாம்! இப்படிப்பட்ட ஒரு அழகான இறைவன் உங்களுக்கு மிக அருகில் இருக்க எங்கோயோ சமாதியிலிருந்து வெளியே வரக்கூட முடியாத நிலையில் இருக்கும் அவ்லியாக்கள் உதவுவார்களா? மரணித்தவர்களுக்கு கூட நம்முடைய துவா தான் தேவையே தவிர அவர்கள் நமக்காக துவா செய்ய முடியாது?
உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை. (அல்குர்ஆன் 35:22)
நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! (அல்குர்ஆன் 27:80)
அல்ஹம்துலில்லாஹ்
கட்டுரை வரைய பேருதவியாக இருந்த வளைத்தளங்களுக்கு நன்றி! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
This page has the following sub pages.
மறுமொழியொன்றை இடுங்கள்