கேள்வி: “பிறர் நமக்கு செய்கின்ற தீமைகளை மன்னித்து பொறுமையாக இருந்தால் இம்மையிலும் மறுமையிலும் அதற்கான நற்கூலி கிடைக்கும்” என்று உள்ள ஹதீஸ்களை விளக்கவும்…
நபிகளார் பல நேரங்களில் தம் எதிரிகளை கூட மன்னித்துள்ளார்கள்… தங்களுக்கு தெரிந்த சம்பவங்களை விளக்கவும்…நபிகளாரின் பொறுமையை நமக்கும் அல்லாஹ் அளிப்பானாக… ஆமீன்…
பதில்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாம் அலைக்கும் (வரஹ்)
தீமைகள்
தீமை என்பதை மூன்று வகையாக எடுத்துக்கொள்ளலாம்
1) அறிமுகமில்லாதவர் தற்செயலாக இழைக்கும் தீமை
2) ஒருவர் கூடவே பழகி வேண்டுமென்றே இழைக்கும் தீமை
3) கால்நடை மிருகங்களுக்கு இழைக்கும் தீமை
அறிமுகமில்லாதவர் தற்செயலாக இழைக்கும் தீமை
கடைத்தெருவில் நாம் நடந்து செல்லும்போது நம் உடல், பொருள் ஆகியவற்றிற்கு தீமை ஏற்படுத்துபவர் நமக்கு தீமை இழைத்தால் அதை மன்னிக்க இயலாது காரணம் அவன் வழிப்பறித்திருடனாக இருப்பான் நம்மிடம் தீங்கு இழைத்துவிட்டு மீண்டும் பிறரிடமும் தீங்கு செய்ய முற்படுவான் இவனை விட்டவிட்டால் ரவுடியாக, மிகப்பெரிய தாதாவாக உருவெடுத்து மக்களை மிரட்டி சம்பாதிப்பான். இவனை மன்னிக்க இயலாது உரியமுறையில் காவல்துறையினரிடம் பிடித்துக்கொடுத்து உரிய தண்டனையை இம்மையில் பெற்றுத்தருவது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கடமையாகிறது.
ஒருவர் கூடவே பழகி வேண்டுமென்றே இழைக்கும் தீமை
ஒருவர் நமக்கு தீமை இழைக்கிறார் என்றால் அவர் நம்மை நன்கு அறிந்தவராக இருக்கவேண்டும் அப்போதுதான் திட்டமிட்டு தீமையை இழைக்க முற்படுவார். அதற்கான காரணங்களை நாம் ஆராய முற்படும்போது பொறாமைதான் அதிகம் இருக்கும் அவன் என்ன என்னை விட சிறந்தவனா? என்னை விட பணக்காரனா? என்னை விட அழகானவனா? என்னை விட புத்திசாலியா? என்ற எண்ணம் நம் பிறந்த சகோதரனுக்கு கூட தோன்றிவிட்டால் அவன் நம்மை ஒவ்வொரு அங்குலமாக பின்தொடர ஆரம்பித்துவிடுவான் பின்னர் பொறாமை தலைக்கேறிவிடும் தீமையான காரியத்தில் ஈடுபட்டு நம்மை ஏசுவான், அடிக்க வருவான், பெயர் கெடுப்பான், புறம் செய்யவான்.
இதுபோன்ற தீமை ஒரு மன நோயாக கூட சில நேரம் மாறிவிடும், வைராக்கியம் வந்துவிடும், குலப் பெருமை வந்துவிடும் ஆனால் அதே சமயம் இப்படிப்பட்ட மக்கள் பிற மக்களிடமும் சொந்தபந்தகங்களிடம் அன்பாகவும், நேர்மையாகவும் நடந்துக்கொள்வார்கள் ஆனால் நம்மிடம்தான் தீய செயல்களை செய்வார்கள். இப்படிப்பட்டவர்கள்தான் சொந்த குடும்ப இரத்த பந்தங்களை உதறிதள்ளிவிட்டு பிரிந்து வாழ்வார்கள். இப்படிப்பட்டவர்களிடம் நாம் நலினமாகவும், பெருந்தண்மையாகவும் நடந்துகொண்டால் அவர்கள் உணர ஆரம்பித்து தீமையை விட்டு விலகிவிடுவார்கள். பழைய நட்பு மீண்டும் தொடர வாய்புள்ளது. இத்தீமையை மன்னித்துவிடலாம்.
இதோ இறைவசனம்
எவரேனும் (தனக்கிழைக்கப்பட்ட) அக்கிரமத்திற்கு (அதே அளவு) பழிவாங்கினால் அதனால் அவன் மீது யாதொரு குற்றமுமில்லை. குற்றமெல்லாம் அளவுமீறி மனிதர்கள் மீது அக்கிரமம் செய்து நியாயமின்றிப் பூமியில் கொடுமை செய்வோர்மீதுதான். இத்தகையோருக்கு மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால் நிச்சயமாக இது மிக்க வீரம் பொருந்திய காரியமாகும். (அல்குர்ஆன் 42:39-43)
இதோ நபிமொழிகள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:”நீ உன் சகோதரனுக்கு உதவிடு, அவன் கொடுமைக்காரனாக இருப்பினும் சரி, கொடுமை இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் சரி!” ஒருவர் வினவினார்:
”அல்லாஹ்வின் தூதரே! கொடுமைக்கு ஆளானவன் என்றால் நான் அவனுக்கு உதவுவேன். ஆனால், கொடுமைக்காரனாக இருக்கும்போது அவனுக்கு எவ்வாறு உதவுவேன்?”
நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்: ”கொடுமை புரிவதிலிருந்து அவனை நீ தடுத்துவிடு! இதுவே அவனுக்கு உதவுவதாகும்.” அறிவிப்பாளர் : அனஸ் (ரழி) (புகாரி, முஸ்லிம்)
2449 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்.) (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஆதாரம் – புகாரி Volume:2 Book:46
விலங்கினங்களுக்கு இழைக்கப்படும் தீமைகள்
அபூஹுரைரா (ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: “தாகித்திருந்த ஒரு நாயின் தாகத்தை தீர்ப்பதற்காக கிணற்றில் இறங்கி நீர் கொண்டுவந்து நாயின் தாகத்தைத் தீர்த்த மனிதனின் செயலை அல்லாஹ் நன்றியுடன் பொருந்திக் கொண்டு அவனின் பாவங்களை மன்னித்து விட்டான் ” என்று பெருமானார் சொன்னபோது, “இறைத்தூதரே, விலங்குகளுக்கு உதவினாலும் அல்லாஹ்விடத்தில் வெகுமதி கிடைக்குமா?” என்று வினவிய போது, “ஆம்! விலங்குகளுக்கு உதவி செய்தாலும் வெகுமதியுண்டு” என்றார்கள்.இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு பூனையை வீட்டிலடைத்து உணவு கொடுக்காமல் பட்டினி போட்டுக் கொன்ற பெண் நரகில் வேதனை செய்யப்படுவதாகச் சொன்னார்கள் (புகாரி).
2435 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவரின் கால்நடையிடம் அவரின் அனுமதியின்றி எவரும் பால் கறக்க வேண்டாம். உங்களில் எவரும் அவரின் சரக்கு அறைக்கு ஒருவர் வந்து, அவரின் உணவுக் கருவூலத்தை உடைத்து, அவரின் உணவை எடுத்துச் சென்று விடுவதை விரும்புவாரா? இவ்வாறே, அவர்களின் (கால்நடை உரிமையாளர்களின்) கால் நடைகளுடைய மடிகள் அவர்களின் உணவையே சேகரித்துப் பாதுகாத்து வைத்திருக்கின்றன. எனவே, எவரும் ஒருவரின் கால்நடையிடம் அவரின் அனுமதியின்றிப் பால் கறக்க வேண்டாம். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஆதாரம்-புகாரி Volume:2 Book:45
உங்கள் அத்துமீறல்களுக்கு பயந்துக்கொள்ளுங்கள்
2440 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறை நம்பிக்கையாளர்கள் நரகத்திலிருந்து தப்பி வரும்போது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அப்போது உலகில் (வாழ்ந்த போது) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்கு அந்தப் பாலத்திலேயே ஒருவருக்கொருவர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள். இறுதியில், அவர்கள் பாவங்களிலிருந்து நீங்கித் தூய்மையாகி விடும்போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! அவர்கள் சொர்க்கத்தில் உள்ள தம் வசிப்பிடத்தை, உலகில் அவர்களுக்கிருந்த இல்லத்தை விட எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள். என அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) அறிவித்தார். ஆதாரம்-புகாரி Volume:2 Book:46
2448 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். அநீதியிழைக் கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள். ஆதாரம்-புகாரி Volume:2 Book:46
மூமின்கள் பண்புகள் பற்றி அறிந்துக்கொள்ளுங்கள்
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களோடு நடந்து சென்று கொண்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் ஒரம் தடித்த நஜ்ரானி போர்வை ஒன்றை அணிந்திருந்தார்கள். அதை ஒரு கிராமவாசி பிடித்துக்கொண்டு மிகக்கடுமையாக இழுத்தார். நான் நபி (ஸல்) அவர்களின் புஜத்தைப் பார்த்தேன். கடுமையாக இழுத்ததன் காரணத்தால் அதில் போர்வையின் ஒரத்தின் அடையாளம் பதிந்திருந்தது. பின்பு அந்த கிராமவாசி “முஹ்ம்மதே! உம்மிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்க உத்தரவிடுங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பி சிரித்தவர்களாக அவருக்கு சில அன்பளிப்புகளைக் கொடுக்க உத்தரவிட்டார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
அவர்கள் எத்தகையோரென்றால் செல்வ நிலைமையிலும் வறுமை நிலைமையிலும் தானம் செய்துகொண்டேயிருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:134)
நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால் நபியே! தீமையை) நீர் நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளும். அவ்வாறாயின், உம்முடைய கொடிய விரோதியை அதே சமயத்தில் உம்முடைய மெய்யான, மிக்க நெருங்கிய சினேகிதனைப்போல் காண்பீர். பொறுமையுடையோர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். அன்றி பெரும் பாக்கியம் உடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடையமாட்டார்கள். (அல்குர்ஆன் 41:34,35)
தீமை பற்றி எனக்குத்தோன்றிய கருத்துக்கள் இவை தவறாக இருந்தால் கூறுங்கள் (இன்ஷா அல்லாஹ்) குர்ஆன்-ஹதீஸ் முறைப்படி திருத்திக்கொள்கிறேன்
அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே)
மறுமொழியொன்றை இடுங்கள்