இஜ்ராயீல் என்ற மலக்கு இருப்பதாகவும் அவர்தான் உயிரைக் கைப்பற்றக்கூடிய மலக்கு என்றும் பொதுவாக நம்பப்படுகிறது அப்படி ஒரு மலக்கு இருக்கிறாரா? நல்லோர் தீயோர் மரண நேரம் பற்றிய கருத்து என்ன?
பதில்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
பெயர் கூறப்பட்ட மலக்குமார்கள்
أَللَّهُمَّ رَبَّ جِبْرَائِيْلَ، وَمِيْكاَئِيْلَ، وَرَبَّ إِسْرَافِيْلَ، أَعُوْذُ بِكَ مِنْ حَرِّ النَّارِ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ
பொருள்: யாஅல்லாஹ்! ஜிப்ரயீல், மீகாயீல், இஸ்ராஃபீல் ஆகியோரின் இறைவா! நரக வெப்பம் மற்றும் மண்ணரை வேதனை ஆகியவைகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (ஆதார நூற்கள்: திர்மிதி, நஸயீ)
நல்லவர் தீயவர் ஆகியவர்களின் மரண வேலையில் மலக்குகளின் அணுகுமுறை இதுதான்!
முஃமினான ஒரு அடியான் உலகத் தொடர்புகளைத் துண்டித்து மறுமையை நோக்கிக் கொண்டிருக்கையில் சூரிய ஒளிக்கொப்பான, பிரகாசமுள்ள முகத்துடன் சில மலக்குகள் அவனிடம் வருவார்கள் சுவர்க்கத்தின் நறுமணத்துடன் கூடிய துணியையும் எடுத்து வருவார்கள், அவர்களில் உயிர் பறிக்கும் மலக்கு அவனிடத்தில் வந்தமர்ந்து உயிரை வெளியேறும்படி கட்டளையிடுவார். அது (உயிர்) தோல்பை யிலிருந்து (சுலபமாக) நீர் வெளியேறுவதைப் போல் (மிகச்சுலபமாக) வெளியேறிவிடும்.
நிராகரித்தவனின் மரண வேளை நெருங்கி விட்டால் கருநிற (விகாரமான) முகத்துடன் சில மலக்குகள் அவனிடம் வருவார்கள், அவர்களிடம் கம்பளி துணி ஒன்று இருக்கும். உயிh பறிக்கும் மலக்கு அவனிடம் வந்தமர்ந்து கெட்ட ஆத்மாவே வெளியேறு என்பார் அவ்வுயிர் பயந்து இங்கும், அங்குமிங்குமாக உடலில் ஓட ஆரம்பிக்கும் அப்போது அந்த மலக்கு நனைந்த கம்பளியிலிருந்து முடியை பறிப்பது போல் பலவந்தமாக (சிரமப்பட்டு) பறித்தெடுப்பார் (ஹதீஸின் சுருக்கம்) பராவு இப்னு ஆஸிப் (ரலி) அஹ்மத், அபூதாவூத்.
உயிரை பறிக்கும் வானவர் (மலக்குல் மௌத்)
ஆகவே (நபியே!) நீர் கூறுவீராக உங்களுக்கென நியமனம் செய்யப்பட்டிருக்கும் மலக்குல் மௌத் (ஆகிய வானவர் தான்) உங்களுடைய உயிரைக் கைப்பற்றுவார். பின்னர் (மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு) உங்கள் இரட்சகனிடமே நீங்கள் திருப்பிக் கொண்டு வரப்படுவீர்கள். திருக்குர்ஆன் 32:11
மூமின்களின் உயிரை பறிக்கும் மலக்குகள்
அவர்கள் எத்தகையோரென்றால், (ஈமானுடன்)நல்ல வர்களாக இருக்கும் நிலையில் மலக்குகள் அவர்)களுடைய உயிர்) களைக் கைப்பற்றுவார்கள். அவர்களிடம் ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்குச் சாந்தி உண்டாவதாக!) நீங்கள் செய்து கொண்டிருந்ததின் காரணமாக சுவனபதியில் பிரவேசியுங்கள் என்று அவர்கள் கூறுவார்கள். திருக்குர்ஆன் 16:32
இஸ்ராயீல் என்பது யாருடைய பெயர்
இஸ்ராயீல் என்பது முன்னர் ஒருகாலத்தில் வாழ்ந்த கோத்திரத்தாரின் பெயராகும் அவர்கள் பனூ இஸ்ராயீல் கோத்திரத்தை சார்ந்தவர்கள். இவர்களைப்பற்றி திருமறை யில் அதிகம் கூறப்பட்டுள்ளது மேலும் கீழே உள்ள நபிமொழியை படித்தால் அவர்களில் ஒரு குழுவினர் அல்லாஹ்வுக்கு மாற்றமாக நடந்தவர்களாகத் தெரிகிறது இதோ அந்த ஹதீஸ்
1886. பனூ இஸ்ராயீல்களில் ஒரு குழுவினர் காணாமல் போய்விட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. நான் அவர்களை எலிகளாக (உருமாற்றப்பட்டு விட்டதாக)வே கருதுகிறேன். அவற்றுக்கு (முன்னால்) ஒட்டகத்தின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக்) குடிப்பதில்லை. அவற்றுக்கு (முன்பாக) ஆடுகளின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக் குடித்து விடும்” என்று நபி (ஸல்) அவர்கள் அவர்கள் சொன்னார்கள். இதை நான் கஅபுல் அஹ்பார் (ரலி) அவர்களுக்கு அறிவித்தேன். உடனே அவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் இதைச் சொல்ல நீங்கள் கேட்டீர்களா?’ என்று வினவினார்கள். நான், ஆம் (கேட்டேன்)” என்றேன். அவர்கள் (திரும்பத் திரும்பப்) பலமுறை அதே போன்று கேட்டார்கள். ‘நான் தவ்ராத்தையா ஓதுகிறேன்? (அதிலிருந்து சொல்வதற்கு?)” என்று கேட்டேன். புஹாரி : 3305 அபூஹூரைரா (ரலி).
இஜ்ராயீல் என்ற வானவர் இருக்கிறாரா? நம்பலாமா?
மலக்குமார்களை நம்புவது இஸ்லாத்தில் ஈமானின் (இறை நம்பிக்கையின்) ஒரு பகுதியாகும். எனவே நாம் ஈமான் கொள்வதாக இருந்தால் அந்த ஈமானை அல்லாஹ் தன் திருமறையின் வாயிலாக அறிவித்திருக்க வேண்டும் அல்லது நபிகளார் (ஸல்) தம் வாய்மொழியாக அறிவித் திருக்க வேண்டும். திருமறையிலோ, நபிமொழியிலோ இஸ்ராயீல் என்ற ஒரு வானவர் இருப்பதாக நாமறியோம். யாருக்கேனும் இஜ்ராயீல் என்பவர் அல்லாஹ்வின் வானவர் என்று ஆதாரம் கிடைத்தால் சமர்ப்பிக்கவும்!
ஆதாரம் இல்லாததை பின்பற்றி அதை உண்மை என்று நம்பினால் நாம் தான் மோசம் போவோம் அல்லாஹ் இதற்கும் கேள்வி கேட்பான்!
பொதுவாக இஜ்ராயீல் என்ற பெயர் எப்படி வந்திருக்கும்
அந்த காலத்தில் நம் தாய்மார்கள் குழந்தைகள் தூங்கவில்லை எனில் கப்பர் சிங் வந்துவிடுவான் உறங்கி விடு என்பார்கள். தமிழகத்தில் வீரப்பன் வந்து விடுவான் சாப்பிடு என்பார்கள் இது சமீபகால நடைமுறை இதையே சில 100 ஆண்டுகளுக்கு முன் எவ்வாறு கூறியிருப்பார்கள் சிந்தித்துப் பாருங்கள், பனூ இஸ்ராயீலின் மேற்கண்ட ஹதீஸ்-ஐ நம் குல தாய்மார்கள் (பாட்டிமார்கள்) படித்திருக் கலாம் அவர்களை வைத்து பிள்ளைகளை பயமுறுத்த இஸ்ராயீல் வந்துவிடுவான் என்று கூறியிருக்கலாம் (அல்லாஹ்தான் நன்கறிவான்) அந்த சொல் மருவி தற்போது தர்காவாசிகளால் இஸ்ராயீல் என்ற வானவர் இருக்கிறார் அவர் உயிரை பறிக்கும் வாணவர் என்று வந்திருக்கும்! பாம்பு, யானைக்கு கூட தர்கா கட்டி கும்பிடுபவர்களுக்கு ஒரு பெயரை முன்மொழிந்து அவர் வானவர் என்று கூற சொல்லியா தரவேண்டும்!
கட்டுக்கதைகளால் உருவான ஒருவரை அல்லாஹ் அனுப்பியதாக நம்பினால் அல்லாஹ்வுக்கு துரோகம் செய்த பாவம் நமக்கு வந்துவிடும் எனவே இவ்வாறு ஒரு வானவர் இருப்பதாக எண்ணுவதே இறைநிராகரிப்புச் செயலாகும்.
சரி இப்போது ஆதாரத்துடன் கூடிய மலக்குமார்களை அறிந்துக்கொள்ளுங்கள்
ஜிப்ரயீல் (அலை) என்ற வானவருக்கு ஆதாரம்
நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும். திருக்குர்ஆன் 81:19
நான் வானவர் ஜிப்ரீலை அவரின் அசல் உருவத்தில் பார்த்தேன். அவருக்கு 600 இறக்கைகள் இருந்தன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது, ஆதாரம்: புகாரி,தப்ரானி).
மாலிக் என்ற வானவர் (மலக்) உள்ளார் ஆதாரம் கீழே
மேலும், அவர்கள் (நரகத்தில்) ”யா மாலிக்” உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே!” என்று சப்தமிடுவார்கள்; அதற்கு அவர் ”நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே” என்று கூறுவார். திருக்குர்ஆன் 43:77
இஸ்ராஃபீல் (அலை) என்ற வானவருக்கு ஆதாரம் கீழே
சூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியோரைத்தவிர வானங் களிலும் பூமியிலும் உள்ளளோர் மடிந்து விடுவர். திருக்குர் ஆன் 39:68
சுவனத்தில் ஸலாம் கூறி வரவேற்கும் வானவர்கள்
சுவனவாசிகள் சுவனத்தில் நுழைந்ததும் ஒரு மலக்கு அனைவரையும் அழைத்து சுவர்க்கவாசிகளே! நிச்சயமாக நீங்கள் இங்கு எப்பொழுதும் ஜீவித்து இருப்பீர்கள். ஒரு போதும் மரணிக்கமாட்டீர்கள். மேலும் நிச்சயமாக நீங்கள் இங்கு எப்பொழுதும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். ஒருபோதும் நோயாளிகளாக ஆகமாட்டீர்கள். மேலும் நிச்சயமாக நீங்கள் இங்கு வாலிபமாகவே இருப்பீர்கள். ஒருபோதும் வயோதிகம் (முதுமை) அடையமாட்டீர்கள். மேலும் நிச்சயமாக நீங்கள் இங்கு சுகத்தை அனுபவித்துக் கொண்டு இருப்பீர்கள். ஒருபோதும் கஷ்டப்படமாட்டீர்கள் எனக் கூறினார்கள். அபூஹூரைரா (ரலி) முஸ்லிம்
மறுமொழியொன்றை இடுங்கள்