பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இறைநேசர்கள் யார்?
இறைநேசர்கள் என்ற சொல்லுக்கான விளக்கம்
இறைநேசர்கள் அதாவது இறை (+) நேசர்கள் இறைவன் யாரை நேசிக் கிறானோ அவரே இறைநேசராக இருப்பார்.
இறைவன் யாரை நேசிக்கிறான், யாரை நேசிப்பதாக கூறுகிறான் என்பதை அறிந்துக்கொள்வது பற்றி அவனே தெளிவுபட அருள்மறை குர்ஆனில் கூறியிருக்கிறான்! மேலும் அல்லாஹ் யாரை குறிப்பிட்டு இவர் அவ்லியா என்று கூறவில்லையோ அவர்களை நாம் அவ்லியாவாக கருதமுடியாது! அப்படி நாம் கருதினால் நாம் அல்லாஹ்வின் மீது நாம் பொய்யை இட்டுக்கட்டிய குற்றத்திற்கு தள்ளப்படுவோம் இதை உணரவேண்டாமா?
சிலர் தர்காஹ்-கப்ருகளில் இருக்கும் இறந்த மனிதர்களை அவ்லியாக்கள் என்றும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைநேசர்கள் என்றும் வாய்கூசாமல் பொய்களை அவிழ்த்து விடுகிறார்கள் அவர்களிடம் நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் இதற்கான ஆதாரத்தை முன்வைக்கவேண்டும்! மேலும் இவ்வாறு பொய் கூறுபவர்கள் கீழ்கண்ட இறைவசனத்தை படித்திருக்க வேண்டாமா?
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? குற்றவாளிகள் வெற்றி பெற மாட்டார்கள். (அல் குர்ஆன் 10 : 17)
இறைநேசர்கள் பற்றிய நபிமொழி
அல்லாஹ்வுடைய அடியார்களில் சிலர் நபிமார்களும் அல்ல, தியாகிகளும் அல்ல. மறுமை நாளில் இறைவனிடம் அவர்களுக்குள்ள பதவிகளைக் கண்டு நபிமார்களும், தியாகிகளும் பொறாமைக் கொள்வர். என்று நபி கூறினர். (அப்பொழுது) அவர்கள் யார்? என்று எங்களுக்கு அறிவியுங்கள் என்று தோழர்கள் கேட்டனர். (அதற்கு) நபி அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவே தங்களிடையே நட்புக்கொள்வர். அவர்களுக்கிடையில் உறவின் முறையும் இருக்காது. பணத்திற்காகவும் அவர்கள் நட்புக் கொள்ள மாட்டார்கள். இறைவன்மீது ஆணையாக அவர்களின் முகம் ஒளிர்ந்து கொண்டிருக்கும். அவர்கள் இறை வழியில் செல்வார்கள். மக்கள் அச்சமுறும் பொழுதும், துக்கிக்கும் பொழுதும் அவர்கள் அச்சமுறவும் மாட்டார்கள். துக்கிக்கவும் மாட்டார்கள். “.(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.” என்ற 10:62 வது வசனத்தை ஓதினர். அறிவிப்பவர்: உமர்(ரலி) நூல்: அபூதாவூத்
இங்கு நபிகளார் அறிவிக்கும் அல்லாஹ்வின் அடியார்களின் சிறப்புகளை பாருங்கள்!
அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவே தங்களிடம் நட்பு கொள்வர்!
இங்கு கவனிக்க வேண்டியது இரண்டு விசயங்கள்
1) அல்லாஹ்வின் பொருத்தம்
2) அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக நட்பு கொள்வது
அல்லாஹ் யாரை பொருந்திக்கொள்கிறான்
ஸஹாபாக்களில் ஒருசிலரை அல்லாஹ் பொருந்திக்கொண்டான்
ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:100)
இந்த இறைவசனத்தில் அல்லாஹ் பொறுந்திக்கொண்ட அடியார்களைப் பற்றி மிக அழகாக கூறுகிறான் ஆனால் அவ்வாறு கூறும் போது யாருடைய பெயரையும் வெளியிடாமல் ரத்தினச் சுருக்கமாக படிப்பவர்கள் கவனமாக சிந்திக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் பொடி வைத்து பேசுகிறான்!
·முதலாவதாக ஹிஜரத் செய்த அனைவரிலும் அவர்களின் ஒரு பகுதியினரை பொருந்திக்கொண்டதாக கூறகிறான்!
· இரண்டாவதாக அன்சாரிகளில் ஒரு பகுதியினரை பொருந்திக் கொண்டதாக கூறகிறான்!
· மூன்றாவதாக அன்சாரிகளில் முந்திச் சென்ற முதலாமவர்களை பொருந்திக் கொண்டதாக கூறுகிறான்!
· நான்காவதாக நல்ல விஷயத்தில் இந்த 3 வகையான கூட்டத்தாரை பின்தொடர்ந்தவர்களை பொருந்திக் கொண்டதாக கூறுகிறான்!
தான் பொருந்திக்கொண்டதாக அல்லாஹ் வாக்களிக்கும் இந்த நபர்களுக்கு சொர்க்கச் சோலைகள் அளிப்பதாக உறுதிமொழி அளிக்கிறான் இந்த வசனத்தின் மூலம் இவர்கள் நல்லடியார்கள் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளார்கள் என்பதும் இதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான் என்பதும் தெளிவுபட விளங்குகிறது (சுப்ஹானல்லாஹ்)! இவர்களை நாம் பின்தொடர வேண்டுமே தவிர வழிபடக்கூடாது காரணம் பின்தொடர்ந்த வர்களை அல்லாஹ் பொருந்திக்கொண்டான் என்று கூறப்பட்டுள்ளது மேலும் இவர்களின் நல்ல செயல்களை நாமும் அவ்வாறு பின்தொடர வேண்டும் என்று அல்லாஹ் மறைமுகமாக போதிக்கிறான்!
உண்மை பேசுவோரை அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான்
இது உண்மை பேசுவோருக்கு அவர்களது உண்மை பயன் தரும் நாள். அவர்களுக்குச் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக்கொண்டனர். இதுவே மகத்தான வெற்றியாகும்” என்று அல்லாஹ் கூறுவான். (அல்குர்ஆன் 5 : 119)
உண்மை பேசுவோரை அல்லாஹ் பொருந்திக்கொள்வதாக பிரகடனப்படுத்துகிறான்.இங்கு முஸ்லிமல்லாத மனிதர்களும் உண்மை பேசுபவராக இருக்கின்றாரே என்ற கேள்வி வரும் ஆனால் இங்கு அல்லாஹ் கூறும் உண்மை பேசுவோருக்கு சொர்க்கச் சோலைகள் தருவதாக வாக்களிக்கப்பட்டுள்ளது அப்படியானல் அவர்கள் அல்லாஹ்வின் அருள்மறையான குர்ஆனையும் மற்றும் நபிகளாரின் வாழ்க்கை நெறிமுறையான ஹதீஸ்களையும் முறையாக பற்றிப்பிடித்து அதன்படி உத்தமமாக வாழ்ந்த, வாழுகின்ற, வாழப்போகின்ற உண்மை பேசுபவர்கள் என்ற அடிப்படையில் சிந்தித்தால் இந்த வசனத்திற்கான விடை கிடைக்கிறது. இதோ கீழ்கண்ட இந்த வசனத்தை யார் பற்றிப் பிடிக்கிறாரோ அவர் உண்மையாளர் என்ற பட்டியலில் அடங்கலாம்!
”நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 3 : 31)
என்னடா இது! இந்த வசனத்தை பின்பற்றினால் போதுமா உண்மையாளர் ஆகிவிடமுடியுமா? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு வரலாம் பயப்படாதீர்கள்! இங்கு அல்லாஹ்வை விரும்பினால் என்னை பின்பற்றுங்கள் என்று கூறப்பட்டுள்ளது அதாவது நபிகளாரை மட்டும் பின்பற்றினால் பயன் ஏதும் கிடையாது மாறாக அல்லாஹ்வை விரும்பி நபிகளாரை பின்பற்ற வேண்டும் அதாவது அல்லாஹ்வின் வார்த்தைகளான அருள்மறை குர்ஆனுக்கு மதிப்பளித்து நபிகளாரின் வாழ்க்கை நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது! குர்ஆன் ஹதீஸ்களை முழுமையாக பின்பற்றுவது!
சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே!
·அல்லாஹ்வை விரும்புபவர் அல்லாஹ்வுக்கு மிகவும் அஞ்சுபவராக இருப்பார்! அல்லாஹ்வுக்கு மாறு செய்ய மாட்டார்
· அல்லாஹ்வின் தூதரை பின்பற்றுபர் அல்லாஹ்வின் தூதர் செய்யாததை செய்யமாட்டார்! அல்லாஹ்வின் தூதரின் கட்டளைகளை அணுவணுவாக அப்படியே பின்பற்றுவார்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொய் கூறியது உண்டா? புறம் கூறியது உண்டா? இவ்வாறு நல்ல பண்புகளை கொண்டு திகழ்ந்ததன் காரணத்தினாலே தானே அவர் அல்அமீன் என்ற அழகான பெயரை பெற்றார் இன்று நம்மில் அல்அமீன்கள் உள்ளனரா? இன்று நாமெல்லாம் நாடகமாடும் நடிகர்களாக இருக்கிறோம் நபிகளாரோ என்றுமே அல்அமீனாக இருக்கிறார்! (சுப்ஹானல்லாஹ்)
இன்று நாம் பொய்யும் கூறுகிறோம், புறமும் கூறுகிறோம் அப்படியானால் நாம் எவ்வாறு உண்மையாளர்களாக முடியும்! எனவேதான் அல்லாஹ்வை விரும்பினால் என்னை பின்பற்றுங்கள் என்று கூறப்பட்டுள்ளது!
அப்படியே நாம் உண்மையாளர்களாக இருந்தாலும் அல்லாஹ் நம்மை விரும்புவது நமக்கு தெரியாது அது மறுமையில்தான் தெரியவரும்! எனவே நாம் நம்மை அவ்லியா என்று கூறிக்கொள்ள முடியாது! அல்லாஹ் நம்மை விரும்புவது ஜிப்ரயீல் (அலை) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு மலக்குமார் களுக்கு தெரிவிக்கப்படும் அதன் பின்னர் மனிதர்களின் உள்ளத்தில் நம் மீது அன்பு ஏற்படும் மாறாக நம்மை வழிபடும் எண்ணம் ஏற்படாது! ஆனால் இன்று பார்க்கிறோம் அவ்லியாவை நேசிக்கிறோம் என்று கூறி வழிபடுகிறார்கள் இது அல்லாஹ்வின் நேசமா? ஷைத்தானின் தீண்டுதலா?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ் ஒரு அடியானை நேசித்தால் ஜிப்ரீலை அழைத்து இன்னாரை நான் நேசிக்கிறேன் என்று அல்லாஹ் கூறுவான். விண்ணகத்தில் ஜிப்ரீல் இதை அறிவிப்பார். பிறகு பூமியில் உள்ளவர்களுக்கு அவர் மீது அன்பு ஏற்படுகிறது. அல்லாஹ் ஒரு மனிதனை வெறுத்தால் ஜிப்ரீலை அழைத்து இன்னாரை நான் வெறுக்கிறேன் என்று கூறுவான். இதை ஜீப்ரில் விண்ணகத்தில் அறிவிப்பார் எனவே பூமியில் உள்ளவர்களுக்கு அவர் மேல் வெறுப்பு ஏற்படுகிறது.’ அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு நூல் : திர்மிதி (3085)
தமக்கு கீழ்படிபவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான்!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (மறுமையில்) சொர்க்க வாசிகளை நோக்கி, சொர்க்கவாசிகளே!’ என்று அழைப்பான். அதற்கு அவர்கள் எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம்’ என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் ‘திருப்தி அடைந்தீர்களா?’ என்று கேட்பான். அதற்கு அவர்கள் உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத (அருட்செல்வங்கள், இன்பங்கள் ஆகிய)வற்றை எங்களுக்கு நீ வழங்கியுள்ள போது நாங்கள் திருப்தி அடையாமல் இருப்போமா?’ என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் ‘அதைவிடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கப்போகிறேன்’ என்பான். அவர்கள் ‘அதிபதியே! அதைவிடச் சிறந்தது எது?’ என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் ‘உங்கள் மீது என் திருப்பதியை அருளுகிறேன். இனி ஒருபோதும் உங்கள் மீது கோபப்படமாட்டேன் என்று கூறுவான். (அறிவிப்பவர்: அபூசயீத் அல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி – 6549)
அல்லாஹ்வுக்கு கீழ்படிபவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வதாக நற்சான்று அளிக்கிறான்! இன்று நம்மில் எத்தனைபேர் அல்லாஹ்வுக்கு கீழ்படிகிறோம் இந்த வசனத்தை உங்கள் உள்ளத்தில் நுழைத்து சிந்தித்துப் பாருங்கள்.
அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ”செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்” என்பதே நம்பிக்கை கொண்டோன் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 24: 51)
அல்லாஹ் என்ற வார்த்தையை கேட்டால் உள்ளம் நடுங்க வேண்டும் தவறான வழியில் நாம் இருந்து இந்த தவறான வழி அல்லாஹ்வின் தூதர் காட்டிய வழியல்ல என்று அறிந்துக் கொண்டாலோ அல்லது தூதரின் வழிகாட்டுதலை செவியுற்றாலோ அந்த நிமிடமே நாம் நம்முடைய தவறான செயல்களை விடுவித்து அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் முற்றிலும் கட்டுப்பட வேண்டுமே ஆனால் இன்றைக்கு நாம் தலைவர்களுக்கு கீழ்படுதலில்தான் அதிக கவனம் செலுத்துகிறோம் இது உண்மையான கீழ்படுதலா?
தலைமைப் பதவியில் அமர்ந்திருப்பவர்கள் அல்லாஹ் வுக்கும், அவனது தூதருக்கும் ஒரு விஷயத்தில் மாறு செய்வது போன்று தென்பட்டால் அவருடைய அதிகாரத்தின் கீழ் இருப்பவர் என்ன செய்ய வேண்டும்? தலைமை பதவியில் இருப்பவருக்கு கட்டுப்பட வேண்டுமா? அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட வேண்டுமா? இந்த உலகத்தில் உள்ள அற்ப சுகத்திற்காக ஈமானை விற்கலாமா? இவ்வாறு ஈமானை விலைபேசி விற்பவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானா?
அறிந்துக்கொள்ளுங்கள் தோழர்களே இறைநேசர்கள் என்பவர்கள் இவர்கள்தான்!
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைந்தவர்கள்
காசு பணத்திற்காக அல்லாமல் அல்லாஹ்வுகாக ஒருவரை யொருவர் நேசிப்பவர்கள், உதவி செய்பவர்கள், நெருங்கி வாழ்பவர்கள், தம்மைவிட பிறரை அதிகமதிகம் நேசிப்பவர்கள், மக்கள் கொஞ்சம்கூட வழிதவறி நரக வாசலை அடைந்துவிடக்கூடாதே என்று வருந்துபவர்கள்
ஹிஜரத் செய்தவர்களில் ஒரு பகுதியினர்
அன்ஸார்களிலும் மற்றும் முந்திச் சென்ற முதலாமவர்கள்
நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோர்
அல்லாஹ்வுக்கு அஞ்சி நடுங்குபவர்கள்
அல்லாஹ்வுக்காகவே உண்மை பேசுபவர்கள்
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு கொண்ட தவறான கொள்கையை துச்சமாக மதித்து தூக்கி எறிந்தவர்கள்
தவறான தலைமைக்கு கட்டுப்படாமல் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு உண்மையை நிலைநாட்ட பாடபடுபவர்கள் ஆகியோர் அடங்குவார்கள்! இத்தகைய சிறப்பு பெற்றிருந்தாலும் இவர்கள் வணங்கத்தகுதி யானவர்கள் அல்ல!
அவ்லியாவுக்கான இலக்கணம்
ஒருவர் அல்லாஹ்வினால் நேசிக்கப்பட்டு, ஜிப்ரயீல் (அலை) அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, மலக்குமார்களுக்கு முறையான அறிவிப்பு அறிவிக்கப்பட்டு, பூமியில் இருப்பவர்களின் உள்ளத்தில் அன்பு ஏற்படுகிறதோ அவர்தான் அவ்லியா! ஆனால் நீங்கள் யார் யாரையெல்லாம் அவ்லியா என்று கருதுகிறீரோ அவரை அவ்லியாவாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் கீழ்கண்ட ஆதாரங்களை முன்வையுங்கள்!
- அல்லாஹ் நேசிக்கிறான் என்பதற்கு ஆதாரம்
- ஜிப்ரயீல் (அலை) அவர்களுக்கு தெரிவிக்கப்பட்ட ஆதாரம்
- மலக்குமார்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆதாரம்
- பூமியில் இருப்பவர்களின் உள்ளத்தில் அன்பு ஏற்பட்ட தற்கான ஆதாரம்
ஒருக்கால் நீங்கள் அல்லாஹ்விடமும், ஜிப்ரயீல் (அலை), மலக்குமார்கள் மற்றும் மக்களின் உள்ளங்களின் ஆதாரங்களை திரட்டி நம் முன்னால் வைத்து இந்த தர்காஹ்வில் அடைபட்டு கிடக்கும் மனிதர் அவ்லியா என்று சான்றுரைத்தாலும் நாம் அல்லாஹ்வைத்தான் வணங்குவோமே தவிர அவ்லியாவை வணங்கமாட்டோம்! அல்லாஹ் அவனே வணங்குதவதற்கு தகுதியானவன் நாம் அவனுக்கே முற்றிலும் கட்டுப்பட்டவர்களாக இருப்போம்! என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்!
لا اله الا الله محمد رسول الله
(There is none worthy of worship but Allah, and Muhammad is the messenger of Allah)
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்.
குறிப்பு
பல்வேறு இணையதளங்களில் குர்ஆன் ஹதீஸ்களை ஆராய்ந்து பார்த்துத்தான் இந்த கட்டுரை வரையப்பட்டுள்ளது! இந்த கட்டுரை வரைய பேருதவியாக இருந்த இணையதள, பிளாக் சகோதரர்களுக்கு நன்றி! ஜஜாகல்லாஹ் கைரன்!
நம் செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் உற்றுநோக்குபவனாக இருக்கிறான்! அவன் நம் அனைவருக்கும் நிரப்பமாக நற்கூலி வழங்கி நம் பாவங்களை மன்னிப்பானாக!
அறிவைக்கொடுத்தவன் அல்லாஹ் அவனுக்கே புகழனைத்தும்! அல்ஹம்துலில்லாஹ்
மறுமொழியொன்றை இடுங்கள்