கேள்வி-மழைத்தொழுகை மேற்கொண்டும் எங்கள் பகுதியில் மழை பொழியவில்லையே ஏன்?
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அன்புச் சகோதர சகோதரிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு
மழை வேண்டி கேட்கப்பட்ட துவா ஏற்றுக்கொள்ளப்பட வில்லையே என்ற ஏக்கத்தில் தாங்கள் கேள்வி கேட்டுள்ளீர்கள் நியாயமான ஏக்கம்தான்!
சகோதரரே சற்று கீழே கொடுக்கப்பட்ட 4 காரணங்களை சிந்தியுங்கள் உங்கள் உள்ளம் அமைதி பெறும்!
மழையை கொடுக்காமல் தடுத்து நிறுத்தியவன் அல்லாஹ்!
மழை பெய்ய வேண்டி உங்கள் உள்ளங்களில் தொழுகை மேற்கொள்ளலாம் என்ற எண்ணத்தை வித்திட்டவன் அல்லாஹ்!
மழைத் தொழுகை நடத்த உங்கள் அனைவருக்கும் கருணை புரிந்தவன் அல்லாஹ்!
மழைத் தொழுகையில் மழை வேண்டி துவா கேட்கப்பட்டும் மழையை கொடுக்காமல் தடுத்தவனும் அல்லாஹ்!
اللَّهُمَ لا مَانِعَ لِمَا أعْطَيْتَ ، وَلا مُعْطِيَ لِمَا مَنَعْتَ ، وَ لا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
அல்லாஹ்வே! நீ கொடுப்பதை தடுப்பவர் எவரும் இல்லை; நீ தடுப்பதை எவரும் கொடுக்க முடியாது; எந்த செல்வந்தனின் செல்வமும் உன்னை விட்டு அவனுக்கு எப்பலனையும் அளிக்க முடியாது. [புகாரி 1/255, முஸ்லிம் 1/414]
அல்லாஹ்வின் ஆற்றலுக்கு சான்று
மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான். இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க் கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான் அவனே இரவைப் பகலால் மூடுகிறான் – நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (திருக்குர்ஆன் 13:3)
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான் அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வரண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்து கின்றோம் – இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (திருக்குர்ஆன் 7-57)
மனிதனைப் படைத்து அவனுக்கு வேண்டிய அனைத்தையும் கொடுத்து அவன் வேண்டும் போது அவைகளை முறைப்படி நிறைவேற்றுபவன் அல்லாஹ்தான். நினைத்துப் பாருங்கள் முஸ்லிமல்லாதவர்கள் கல்லை வணங்குகிறார்கள் அவைகளிடம் பிரார்த்திக்கிறார்கள் ஆனால் கல் அவர்களுக்கு ஒன்றையும் கொடுப்பதில்லை மாறாக அல்லாஹ்தான் கொடுக்கிறான் ஆனால் மனிதனோ கல், சிலை, கப்ருகளில் உள்ள அவ்லியாக்கள்தான் நமக்கு கொடுத்தன என்று எண்ணிக்கொண்டு அதை கவுரவப்படுத்தி ஏதோ அந்த பொருட்களில், சமாதிகளில் அருள் வந்துவிட்டதாக ஆடி வருகின்றனர். இவர்கள் மூடர்கள் இவர்கள் கண்களிலிருந்தும் குருடர்கள், இவர்கள் செவிடர்கள்!
மனிதர்களில் மேம்பட்ட பிரிவினரின் இறைநம்பிக்கை
எதைக் கொடுத்தாலும் அல்லாஹ்தான் கொடுப்பான், நாம் வேண்டியதை அல்லாஹ் கொடுக்க ஆற்றல் படைத்தவன் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறுயாருமில்லை என்று முழு ஏகத்துவ நம்பிக்கை கொண்டுள்ள மக்களும் நம்மில் உள்ளனர், ஆனால் இப்படிப்பட்ட மக்கள் அல்லாஹ்வை ஏதோ கேட்டதும் கொடுக்கக்கூடிய ATM-மெஷின் போன்று தான் நினைக்கின்றனர் (அல்லாஹ் மன்னிப்பானாக!) இதுவும் தவறான நம்பிக்கையாகும்.
“நம்முடைய அருட்கொடையை மனிதன் நுகரச் செய்து அதன்பின் அதனை அவனிடமிருந்து பறிக்கப்பட்டால் அவன் நம்பிக்கை இழந்து நன்றி கெட்டவனாக ஆகிவிடுகின்றான். அவன் அனுபவித்த இடர்ப்பாடுகளை நீக்கி நம்முடைய அருட்கொடைகளை நுகரச் செய்தால் “என்னுடைய துன்பங்கள் நீங்கிவிட்டன” எனக் கூறி பெரும் மகிழ்ச்சியடைந்து பெருமை பாராட்டுகிறான். (திருக்குர்ஆன் 11:9,10)
மனிதன் (நம்மிடம் பிரார்த்தனை செய்து) நல்லதைக் கேட்பதற்குச் சோர்வடைவதில்லை; ஆனால் அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசையுள்ளவனாகின்றான். (அல்-குர்ஆன் 41:49)
அன்றியும், மனிதனுக்கு நாம் அருள் புரிந்தால் அவன் (நன்றியுணர்வின்றி) நம்மைப் புறக்கணித்து, விலகிச் செல்கிறான் – ஆனால் அவனை ஒரு கெடுதி தீண்டினால் நீண்ட பிரார்த்தனை செய்(பவனா)கின்றான். (அல்-குர்ஆன் 41:51)
மனிதர்களில் மூமின்களின் இறை நம்பிக்கை
மனிதர்களில் உயர்ந்த வகுப்பைச் சார்ந்தவர்கள் மூமின்களே, இவர்கள் தன் அல்லாஹ்வை சர்வ வல்லமை படைத்தவனாக எண்ணி வாழ்வார்கள். இறைவனிடம் பிரார்த்தித்தால் அதில் ஈமான் கொள்வார்கள்! அல்லாஹ்விடம் ஏதாவது ஒன்றை வேண்டி பிரார்த்தித்தால் அது கிடைக்கும் என்று தவக்குல் வைப்பார்கள் கிடைக்கவில்லையெனில் இது அல்லாஹ்வின் நாட்டமே என்று எண்ணிக்கொண்டு அல்லாஹ் கிடைக்காததற்கு பகரமாக ஒரு நன்மையை செய்வான் என்று உண்மையான ஈமான் கொள்வார்கள். இவர்களின் பிரார்த்தனை வீண் போகாது! எனவே நாம் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்வதாக இருந்தால் மூமின்களின் ஈமானை பின்பற்றி உண்மையான மூமின்களாக மாற வேண்டும்! நம்மால் மூமின்களாக மாற இயலாது அல்லாஹ் நாடினால் தவிர எனவே நாம் மூமின்களாக மாறவு்ம அல்லாஹ்விடம்தான் அழுது துவா கேட்க வேண்டும்.
அல்லாஹ்வையும் வானவர்களையும் நபிமார்களையும் கியாமத் நாளையும் நல்லதும் கெட்டதும் அல்லாஹ் விதித்த விதியின்படி நடக்கின்றது என்று ஈமான் கொள்வதுதான் (உண்மையான) ஈமானாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
அல்லாஹ்விடம் எல்லோருக்கும் ஒரே நீதிதான்!
அல்லாஹ் நம்மை படைத்த இறைவன் அவன் சாதாரண மனிதனுக்கும் ஏன் இறைத்தூதர்களுக்கும் ஒரே நீதி தான் செலுத்துகிறான். தான் கொடுக்க நாடினால் அதை மனிதர்களுக்கு கொடுப்பான் தடுக்க நாடினால் தூதர்களுக்கும் தரமாட்டான். இதற்கு யுனுஸ் நபியின் வரலாறு மிகச் சிறந்த சான்றாகும். மேலும் கீழ்கண்ட இறை வசனங்களை படியுங்கள்
நூஹ் தம்முடைய இறைவனை (பிரார்த்தித்து) அழைத்து, “என்னுடைய இறைவனே! நிச்சயமாக என்னுடைய மகன் என் குடும்பத்திலிருந்து உள்ளவன் தான். நிச்சயமாக (என் குடும்பத்தினரைக் காப்பாற்றுவதாக நீ கூறிய) உன்னுடைய வாக்கு உண்மையானதாகும்: நீ தீர்ப்பளிப்போர்களில் மேலான நீதிபதியாக இருக்கிறாய்” என்று கூறினார். (அல்குர்ஆன்: 11:45)
(அப்பொழுது) “நூஹே! நிச்சயமாக அவன் உம் குடும்பத்தில் உள்ளவனல்லன்; நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயலுடையோன் ஆவான்; எனவே, எதில் உமக்கு (தெளிவான) அறிவு இல்லையோ அதனை என்னிடம் நீர் கேட்க வேண்டாம். அறியாதவர்களில் உள்ளவராக நீர் ஆவதை விட்டும் உமக்கு நிச்சயமாக நான் உபதேசிக்கிறேன்” என்று (அல்லாஹ்) கூறினான். (அல்குர்ஆன் : 11:46)
இறைவனால் நிராகரிக்கப்படாத துவா
மூவரின் துவா அல்லாஹ்வினால் நிராகரிக்கப் படாது. பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு செய்யும் துஆ; நோன்பாளியின் துஆ; பிரயாணத்தில் இருக்கும் பயணியின் துஆ.’ ஆதாரம்: திர்மிதி
“மூவரின் துஆக்கள் எப்போதும் (அல்லாஹ்வினால்) நிராகரிக்கப்படுவதில்லை. அவர்கள்: ஒருவர் தமது நோன்பு துறக்கும்போது கேட்கும் துஆ; நீதியான ஆட்சியாளரின் துஆ; அநியாயம் இழைக்கப்பட்டவரின் துஆ” ஆதாரம்: திர்மிதி
முஆத் (ரழி) அவர்களை யமனுக்கு அனுப்பும் போது “அநீதியிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை விஷயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்! எனென்றால் அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் திரை கிடையாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
517. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு முறை மக்களைப் பஞ்சம் வாட்டியது. ஜும்ஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள். அந்த நேரத்தில் வானத்தில் எந்த மழை மேகத்தையும் நாங்கள் பார்க்கவில்லை. என் உயிர் எவனுடைய கைவசனம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக நபி (ஸல்) அவர்கள் தம் கைகளைக் கீழே இறக்கும் முன்பாக மலைகளைப் போல் மேகங்கள் திரண்டு வந்தன. நபி (ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்குள்ளாக மழை கொட்டி அவர்களின் தாடியிலிருந்து வழிந்ததை நான் பாத்தேன். அன்றைய தினமும் அதற்கடுத்த நாளும் அதற்குமடுத்த நாளும் அதற்கு மறு ஜும்ஆ வரையிலும் எங்களுக்கு மழை பொழிந்தது.(மறு ஜும்ஆவில்) அதே கிராமவாசி அல்லது வேறொருவர் எழுந்து ‘இறைத்தூதர் அவர்களே! கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன. செல்வங்கள் மூழ்குகின்றன. எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி ‘இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களை நோக்கி (இதை அனுப்புவாயாக!) எங்களுக்குக் கேடு தருவதாக (இம்மழையை) ஆக்கி விடாதே!” என்று கூறினார்கள். மேகம் உள்ள பகுதியை நோக்கி நபி (ஸல்) அவர்கள் சைகை செய்த போதெல்லாம் அம்மேகம் விலகிச் சென்றது. மதீனா நகர் பெரும் பள்ளமாக மாறியது. (இம்மழையால்) ‘கனாத்’ எனும் ஓடை ஒரு மாதம் ஓடியது. பல்வேறு பகுதிகளிலிருந்து வருபவர்களும் இம்மழையைப் பற்றிப் பேசாமலிருந்ததில்லை. புஹாரி :933 அனஸ் (ரலி)
முடிவுரை!
அன்புச் சகோதர, சகோதரிகளே! அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளுங்கள் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை! நம்பிக்கையிழந்து சோர்ந்துவிடாதீர்கள் அவ்வாறு சோர்ந்து விரக்தியடைந்துவிட்டால் ஷைத்தான் உங்களை வென்றுவிடுவான்! இந்த நிலையை நம்மில் யாராவது விரும்புவாரா? எனவே சகோதர, சகோதரிகளே நீங்கள் சுவனம் புக விரும்பினால் அல்லாஹ்வின் மீது நபிகளார் (ஸல்) கொண்ட ஈமான் போன்று நாம் ஈமான் கொள்ள வேண்டும் அதாவது:
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களோ, அபுபக்கர் அவர்களே! நம் இரண்டு பேர்களைப் பற்றி என்ன நீங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள், நம் இருவரில் மூன்றாவதாக ஒருவன் இருக்கிறானே அவனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். அந்த இறைவன் நம்முடன் இருக்கின்றான் என்று அவர்களுக்கு கூறி, இறைவனின் உதவியால் நாம் பாதுகாப்பாகத் தான் இருக்கின்றோம் என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத் தினார்கள்.
அல்லாஹ் நம்மிடம் திருமறையில் இவ்வாறுதான் பேசுகிறான்
‘என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கின்றேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும்!’ (அல்குர்ஆன் 2:186) எனக் கூறுகின்றான்.
பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம். (அல்-குர்ஆன் 37:75)
அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே)
குறிப்பு- இந்த பதில் தவறாக இருந்தால் சுட்டிக்காட்டவும் இன்ஷா அல்லாஹ் குர்ஆன்-ஹதீஸ் நடையில் இருந்தால் திருத்திக்கொள்கிறேன்
I want new registers…